பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை அவர்கள் நீதிமன்றத் திகதிகளைக் கவனிப்பது நல்லது என்றும் அமைச்சர் நளிந்த கிண்டல்.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும் ஏற்படுத்தாது. அதேவேளை, கூட்டங்களுக்கான திகதிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் விரைவில் குறித்து கொள்வது நல்லது. ஏனெனில் அக்கட்சியினரில் பல பேருக்கு நீதிமன்றத்தில் திகதி வழங்கப்பட்டுள்ளன.”

இவ்வாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார் .

அரசின் ஆரோக்கியமான இலங்கை என்ற திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மையத்துக்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் வெவ்வேறு கட்சிகளாகவும் குழுக்களாகவும் பிரிந்து அரசியல் செய்து வந்தவர்கள், தற்போது தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஒரே மேடையில் ஒன்று கூடி வருகின்றார்கள். இத்தகைய பேரணிகள் நடப்பதன் மூலம், இந்தப் பழைய அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே கொள்கைகளை உடையவர்கள் என்பதை நாட்டு மக்கள் மிகத் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும், ஒரு ஜனநாயக நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சுதந்திரமாக கூட்டங்களை நடத்தவும், பிரசாரங்களை முன்னெடுக்கவும் முழு உரிமையுள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச சபைகளுக்குச் சொந்தமான மைதானங்களை ஒதுக்கிக் கொடுப்பதுடன், அவர்களுக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பையும் அரசு எவ்வித பாகுபாடுமின்றி வழங்கி வருகின்றது.

எதிர்க்கட்சியினர் தங்களின் அரசியல் சுறுசுறுப்பைக் காட்டுவதற்காக நாடாளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ இவ்வாறான கூட்டங்களை நடத்துவது இயல்பான ஒரு விடயம் மட்டுமே.

கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் நாட்டு மக்கள் இந்த பழைய அரசியல் சக்திகளை முற்றாக நிராகரித்து, தேசிய மக்கள் சக்திக்கு மிக வலுவான மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். எனவே இவ்வாறான பேரணிகள் மக்கள் மத்தியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் சுகாதாரத்துறை, கல்வி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் துறைகளிலும் அரசின் அபிவிருத்திப் பணிகள் தடங்கலின்றி மிக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.