உலக சந்தையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருள் மிகக் குறைந்த விலையில் விற்பனை – அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவிப்பு.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ள போதிலும், இலங்கையில் உலக சந்தையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்று அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
“தற்போதைய சந்தை விலையில் தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்க முடியாது எனவும், தமக்கு லீற்றருக்கு 140 ரூபா முதல் 160 ரூபா வரை நட்டம் ஏற்படுகின்றது எனவும் சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எனினும், இது தொடர்பில் அரசு இதுவரை எந்தவொரு இறுதி முடிவையும் எட்டவில்லை.
எரிபொருள் சந்தையைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டதன் முதன்மை நோக்கமே, சந்தையில் போட்டித் தன்மையை உருவாக்கி நுகர்வோருக்கு நியாயமான விலையில் எரிபொருளை வழங்குவதாகும். எனவே, நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதே அரசின் எப்போதும் முதன்மைக் முன்னுரிமையாகும்.
தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வாக, கடந்த மே மற்றும் ஏப்ரல் மாதங்களில் டீசலுக்கு 100 ரூபாவாகவும், பெற்றோலுக்கு 20 ரூபாவாகவும் அரசு நிவாரணம் வழங்கியதைப் போலத் தொடர்ந்து நிவாரணம் வழங்குவது அல்லது தனியார் நிறுவனங்களுக்குத் தகுந்த விலை எல்லைகளை நிர்ணயித்து அதன் கீழ் செயற்பட அனுமதிப்பது போன்ற பல்வேறு சாத்தியக்கூறுகள் தற்போது தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
நுகர்வோரின் பொருளாதாரச் சுமையையும், விநியோக நிறுவனங்கள் முகங்கொடுத்துள்ள சிக்கல்களையும் சமமாகக் கவனத்தில் கொண்டு, விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகு அரசு இது தொடர்பாக விரைவில் உரிய முறையான முடிவை எடுக்கும்.” – என்றார்.
