லண்டனில் முதல்வர் விஜய்: தமிழ்நாட்டில் ₹11,000 கோடி முதலீட்டில் 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் GCCs விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

முதல்வர் விஜய்யின் பிரித்தானியா பயணம்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். அங்கு லண்டன் வாழ் தமிழர்கள் முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த பயணத்தின் ஒருபகுதியாக சில்வர்ஸ்டோர் சர்க்யூட் மைதானத்தில், நடிகர் அஜித் கலந்துகொண்ட கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

கையெழுத்தான 3 ஒப்பந்தங்கள்

இந்நிலையில், இன்று முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres – GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.

சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட ‘GCC காரிடார்’ (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

முதல்வர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன் மற்றும் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா (Sigma AB Pvt Ltd-இன் ஒரு பகுதி)மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப் IAS ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.