தன்னைப் ‘புலி’ என்று அடையாளப்படுத்திய அர்ச்சுனாவின் கருத்தால் பெரும் சர்ச்சை! – பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரிடம் தீவிர விசாரணைக்குப் பொலிஸ்மா அதிபர் உத்தரவு.

அனுராதபுரத்தில் அரசுக்கு எதிராக நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூற்றுத் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அனுராதபுரம் மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தின் போது ஆற்றப்பட்ட உரைகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே பொலிஸ்மா அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் அல்லது அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்தப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி, ‘ஒன்றிணைந்த எதிர்க்கட்சி’ அமைப்பு மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவினால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட கருத்தே இந்தப் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஒப்பீட்டு ரீதியாகக் குறிப்பிட்டு உரையாற்றிய அவர், தன்னை ஒரு ‘புலி’ என்றும், ஜனாதிபதியை ‘நரி’ என்றும் விமர்சித்துப் பேசியிருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பிலான எந்தவொரு குறிப்பையும் நீண்டகாலமாக விமர்சித்து வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுக்கு மத்தியிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் முன்னிலையிலும் பொதுமேடையில் விடுதலைப்புலிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இதுவரை சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டுள்ள சூழலில், பொதுமேடையில் அவ்வாறான கருத்துக்கள் பகிரப்பட்டமை நாட்டின் சட்டத்துக்கு முரணானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்தே, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.