அனோஜனின் விடுதலைக்காக சவூதித் தூதுவரைச் சந்தித்து முறையிடத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை முயற்சி – மனோ கணேசன் எம்.பி. தகவல்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில், இலங்கையில் உள்ள சவூதி அரேபியத் தூதுவரை நேரில் சந்தித்து, அந்த நாட்டுப் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவுத்திடம் கோரிக்கை முன்வைக்கத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இது குறித்துப் பேரவையின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்:-
“சவூதி அரேபியாவில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடயத்தில், கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசருக்கு, இலங்கைக் குடியரசுக்கான சவூதி அரேபியத் தூதுவரை நேரடியாகச் சந்தித்து அவர் ஊடாக ஒரு கூட்டு வேண்டுகோளை முன்வைக்க வேண்டும் எனத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை அங்கத்துவச் சகோதரக் கட்சித் தலைவர்களிடம் கோரியுள்ளேன்.
இது தொடர்பில் நாம் பேரவைக்குள் அவசரமாக உரையாடுகின்றோம். மேலும், இந்த விடயத்தை நமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஊடாகவும் முன்னெடுத்து, இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக இந்த விடயத்தைச் சவூதி அரேபிய அரசிடம் எடுத்துச் செல்லுமாறும் கோருகின்றோம்.” – என்றார்.
