சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் எழுதிய ‘தமிழன் கனவு’ நூல் அறிமுக விழா!
தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில், சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் எழுதிய ‘தமிழன் கனவு’ என்ற நூலின் அறிமுக விழா நேற்று மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.
ஆசிரியர் தருமலிங்கம் சுரேஷ் இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.
விழாவின் ஆரம்பத்தில், கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியப் பொருளாளர் கணபதிப்பிள்ளை குருக்கள் நீலாம்பரம் ஐயா மற்றும் இயேசு சபை யோசேப்பு மேரி சுவாமிகள் ஆகியோர் மங்கல ஆசியுரைகளை வழங்கினர்.
இந்த நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் குமாரசாமி ரவிச்சந்திரன் முதன்மை விருந்தினராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் சிறப்புரைகளை நிகழ்த்தினர்.
சிரேஷ்ட சட்டத்தரணி எவ்.எக்ஸ்.எஸ். விஜயகுமார் நூல் குறித்த அறிமுக உரையை வழங்க, பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான நவரத்தினம் சிவகுமார் விமர்சன உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.
சகோதர இனத்தின் பார்வையில் சட்டத்தரணி பஹீர் மொஹையதீன் வஹாத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவியும் உப தலைவியுமான திருமதி அமலராஜ் அமலநாயகி ‘நீதி தேடுவோர் பார்வை’ எனும் தலைப்பிலும், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தியாகு முகிலன் ‘அடுத்த தலைமுறையின் பார்வை’ எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.
விழாவின் நிறைவாக, நூலாசிரியரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் ஏற்புரையாற்றினார். ஆசிரியர் கணபதிப்பிள்ளை குககுமாரராஜா நன்றியுரை நிகழ்த்தியதுடன், சாந்தீஸ்வரன் சருஸ்திகா மற்றும் செல்வராசு பிரணீத்தா ஆகியோர் நிகழ்வைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினர்.
இந்த நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.












