காணி விடுவிப்பு விவகாரத்தில் தொடரும் தாமதம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வனவளத்துறை திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பதில் தொடரும் தாமதம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், ஜனாதிபதி வழங்கிய தீர்வுகள் ஐந்து மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அமைச்சர் கூறும் கால அவகாசம் எவ்வாறு தீர்வை உறுதிப்படுத்தும் என்று கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கேள்வி – பதில் நிகழ்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வனவளத்துறை திணைக்களத்திடம் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் பிரதமரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு மாத காலத்துக்குப் பதிலளிப்பதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் பதில் கிடைக்கவில்லை என்று சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

காணி விடுவிப்பு விவகாரத்தில் மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக அமைச்சர் குறிப்பிடுவதை ஏற்றாலும், ஜனாதிபதி வழங்கிய தீர்வுகள் கடந்த ஐந்து மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படாத சூழலில், அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்துப் கடுமையான சந்தேகங்கள் எழுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலைச் சுட்டிக்காட்டிய அவர், மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வனவளத்துறை திணைக்களம் தயாராக இல்லை என்பது அங்கு தெளிவாக வெளிப்பட்டது என்றும் கூறினார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வீராணைக்கல் விவசாய அமைப்புக்குச் சொந்தமான சுமார் 560 ஏக்கர் காணியை வன ஒதுக்கமாகப் பிரகடனப்படுத்த வனப் பாதுகாப்புத் திணைக்களம் முன்மொழிந்துள்ளதா என்றும் அவர் வினவினார்.

1979ஆம் ஆண்டு முதல் பயிர்ச்செய்கைக்கும், 1983 முதல் வருடாந்த அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்ட இக்காணிகளுக்கு 2008/04ஆம் இலக்க சுற்றுநிருபத்தின்படி தீர்வு வழங்கப்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பட்டிப்பளை பிரதேசத்தில் 700 ஹெக்டேயர் காணியை விடுவிக்கவுள்ளதாகக் கூறப்பட்டாலும், அங்கு வனவளத்துறை திணைக்களத்துக்குச் சொந்தமான 1,500 ஏக்கர் பகுதி பெரும்பான்மையினத்தவர்களால் சட்டவிரோதமாகக் கைப்பற்றப்பட்டு, அவர்களுக்கே வழங்குவதற்குப் பிரதேச செயலகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் கிவுல் ஓயா திட்டத்துக்காக வனவளத்துறை திணைக்களத்துக்குச் சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் மக்களின் பயன்பாட்டுக்கான காணிகளை விடுவிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், மீதமுள்ள மூன்று ஆண்டுகளுக்குள் இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

மேலும், திவுலான பகுதிக்குக் கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லுமாறு கூறப்பட்டாலும், அங்கு செல்லும் பண்ணையாளர்களுக்கு எதிராக வனவளத்துறை திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வனக் காணிகள், விடுவிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காணிகள் மற்றும் ஏறாவூர்ப்பற்று வீராணைக்கல் காணி விவரங்கள் உள்ளிட்ட பல தரவுகளையும் சுற்றாடல் அமைச்சரிடம் அவர் கோரினார்.

Leave A Reply

Your email address will not be published.