வவுனியா வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலையால் கடும் பதற்றம்! – பொலிஸாரும் அதிரடிப் படையினரும் குவிப்பு.
வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலை ஒன்று கொண்டு வந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புரட்டாசிச் சனிக்கிழமையை முன்னிட்டு, வெடுக்குநாறி ஆலயத்தில் இன்று பெருந்திரளான இந்து பக்தர்கள் வருகை தந்து அன்னதானத்துடன் கூடிய விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் தலைமையில் வருக தந்த குழுவினர், ஆலய வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த மத வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தனர். இதனால் அங்கு கூடியிருந்த இந்து மக்களிடையே கடும் அதிர்ச்சியும் எதிர்ப்பும் நிலவி வருகின்றது.
சம்பவ இடத்துக்குப் பெருமளவிலான பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்கள் வழியில் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு, அவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்பட்ட பின்னரே பொலிஸாரால் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், வைத்தியர் பி. சத்தியலிங்கம், துரைராசா ரவிகரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வழிபாட்டுக்கு வரும் பொதுமக்களை வழியில் மறித்து இடையூறு செய்யாமல், அவர்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாகச் சென்று இறைவனை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள், பொலிஸாரிடம் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.



















