22ஆவது திருத்தச் சட்டத்தின் உண்மையான தாக்கங்கள் இந்த வாரம் முதல் வெளிவரும் – முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா எச்சரிக்கை.
அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் உண்மையான விளைவுகள் மற்றும் தாக்கங்கள் இந்த வாரம் முதல் மக்களுக்குத் தெரியவரும் என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“22ஆவது அரசமைப்புத் திருத்தம் தற்போது நாட்டின் அரசமைப்பில் உள்வாங்கப்பட்டுவிட்டது என்பதால், அதனுடன் எல்லாம் முடிந்துவிட்டது எனக் கூற முடியாது. உண்மையில், 22ஆவது திருத்தத்தின் தாக்கம் இப்போதுதான் ஆரம்பிக்கின்றது. இந்த வாரம் முதல் அதன் நன்மைகள் மற்றும் பாதிப்புகளை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள்.
சட்டங்கள் வெறும் காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும்போது அவற்றின் முழுமையான விளைவுகளை மக்கள் உணரமாட்டார்கள். அவை நடைமுறைக்கு வந்து, அதன் நேரடித் தாக்கங்கள் மக்களைச் சென்றடையும்போதுதான், நாம் என்ன செய்துகொண்டோம் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
22ஆவது திருத்தத்துக்கு சிவில் சமூகத்தினர், அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஏன் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பதும், நீதித்துறையின் சுதந்திரம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதும் அப்போது மக்களுக்குத் தெளிவாகப் புரியும்.
22ஆவது திருத்தத்துடன் இணைந்ததாக ஊழல் எதிர்ப்புச் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. நானும், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் சிவில் சமூகத்தினரும் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தோம். என்னுடன் மனுதாரராக இருந்த முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் எனது தரப்புக்காக ஆஜராகி வாதாடினார்.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவைத் திருத்தி, நீதிமன்றத்துக்கு இருந்த பிணை வழங்கும் அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதிக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்றம் மிகவும் துணிச்சலானதொரு தீர்ப்பை வழங்கியது. அந்தப் பிரிவைத் திருத்துவதன் மூலம் நீதிமன்றத்தின் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்துக்கும வழங்கப்படுமாயின், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது என்றும், கட்டாயமாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு (பொது வாக்கெடுப்பு) நடத்தப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மூலம் உயர் நீதிமன்றத்தின் சுதந்திரமும் பாரபட்சமற்ற தன்மையும் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது.
அதேவேளை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் ‘பயங்கரவாதி’ என்பதற்கான வரைவிலக்கணம் மாற்றப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுதல் அல்லது அரசுக்கு எதிரான சில விடயங்களை ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்தல் போன்ற செயற்பாடுகள்கூட பயங்கரவாத நடவடிக்கைகளாகக் கருதப்படும் வகையில் புதிய சட்டம் அமைந்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள், சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் அரசுக்கு எதிராகச் செயற்பட்டால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படும் அபாய நிலை உருவாகலாம். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கியதாகச் சர்வதேசத்துக்குக் காண்பித்துக்கொண்டே, அதைவிடப் ஆபத்தான சில அம்சங்களைக் கொண்ட புதிய சட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சியே இங்கு இடம்பெறுகின்றது.
ஒருபுறம் 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் நீதித்துறையின் மீது செல்வாக்கைச் செலுத்த முயற்சிக்கின்றது. மறுபுறம் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் ஊடாக அரசுக்கு எதிராகச் செயற்படுவோரை பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்துவதற்கான சூழல் உருவாக்கப்படுகின்றது.
நீதித்துறையின் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டிய மிக முக்கிய விடயமாகும். இவை சட்டங்களில் எழுதப்பட்டுள்ளபோது மட்டும் அவற்றின் முழுமையான தாக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாது. அவை நடைமுறைக்கு வந்த பின்னரே பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை அறிய முடியும். எனவே, எதிர்வரும் காலத்தில் அரசமைப்புச் சட்ட மாற்றங்கள் மற்றும் புதிய சட்டங்களின் நடைமுறை அமுலாக்கம் குறித்து மக்கள் மிகுந்த கவனத்துடன் அவதானிக்க வேண்டும்.” – என்றார்.
