பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு: தரையிறங்கும்போது ஓடுதளத்தில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி!
பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இண்டிகோ விமானத்தின் வால் பகுதி தரையில் மோதியதால் பரபரப்பு நிலவியது.
அசாம் மாநிலம், குவஹாட்டியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு வந்த இண்டிகோ விமானம், பெங்களூரு விமான நிலையத்தில் இரண்டாவது முறையாகத் தரையிறங்க முயன்றபோது அதன் வால் பகுதி ஓடுபாதையில் மோதியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
குவஹாட்டி – பெங்களூரு வழித்தடத்தில் இயக்கப்பட்ட விமானம், கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் வீசிய பலத்த காற்றுக்கிடையே தரையிறங்கும் போது இயல்புக்கு மாறான ஓடுபாதைத் தொடர்பை சந்தித்ததாக இண்டிகோ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவர்கள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் ஏ321 ரக விமானம், கடந்த காலங்களிலும் இதுபோன்று வால் பகுதி ஓடுபாதையில் மோதும் சம்பவங்களை எதிர்கொண்டுள்ளது.
விமானம் தற்போது பராமரிப்புப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தேவையான அனுமதிகளைப் பெற்ற பிறகு மீண்டும் இயக்கப்படும் என்று விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
