மதுரை GRH-இல் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதல்வர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்!
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் தொடக்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்து கொண்ட முதல்வர் விஜய், அந்த மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து திட்டத்தை தொடக்கிவைத்தார்.
முதல் குழந்தையாக அழகுமலை பகுதியைச் சேர்ந்த முத்து யாழினி என்ற பெண் குழந்தைக்கு தங்க மோதிரத்தை முதல்வர் விஜய் அணிவித்தார்.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் என். ஆனந்த், அருண்ராஜ், நிர்மல்குமார், விஸ்வநாதன், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்த முதல்வர் விஜய், அரசு ராஜாஜி மருத்துவமனை வரை சாலைவலம் மேற்கொண்டார்.
இதனிடையே, அனைத்து மாவட்டங்களிலும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அமைச்சர்கள் இன்று தொடங்கிவைக்கின்றனர்.
2026-ஆம் ஆண்டு, ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
காந்தி அருங்காட்சியகம் திறப்பு: இதையடுத்து, ரூ.10.25 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வா் திறந்துவைக்கிறாா். பின்னா், இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் ரத்தம் தோய்ந்த ஆடைகள், அவா் பயன்படுத்திய பொருள்களைப் பாா்வையிடுகிறாா்.
இதைத் தொடா்ந்து, மதுரை அரசு விருந்தினா் மாளிகையில் ஓய்வெடுக்கும் முதல்வா், மாலை 4.30 மணி அளவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறார்.
பின்னர், மாலை 6 மணியளவில் மதுரை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
