நீதிமன்றத்தின் உத்தரவுக்கமையவே நல்லூரில் திலீபனின் சிலை அகற்றம் – அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடியோடு மறுக்கின்றார் அமைச்சர்.
யாழ்ப்பாணம், நல்லூரில் திலீபன் நினைவேந்தலுக்காக அமைக்கப்பட்ட உருவச்சிலை அகற்றப்பட்டது தொடர்பில் அரசின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முற்றாக நிராகரித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த விவகாரத்தில் அரசு எந்தவிதமான இரட்டை நிலைப்பாட்டையும் பின்பற்றவில்லை.
இந்த நினைவேந்தல் பகுதி தொடர்பில் பொலிஸாரினால் கடந்த 21ஆம் திகதி நீதிமன்றத்துக்கு செய்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனைப் பரிசீலித்த நீதிமன்றம், அங்கு அமைக்கப்பட்டிருந்த உருவச்சிலையை ஒரு வழக்குப்பொருளாகப் பொலிஸார் பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டது.
அந்த நீதிமன்றக் கட்டளைக்கு அமையவே, கடந்த 27ஆம் திகதி பொலிஸாரினால் அந்த உருவச்சிலை அகற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. பொலிஸார் நாட்டின் சட்ட நடைமுறையையும் நீதிமன்ற உத்தரவையுமே அமுல்படுத்தியுள்ளனர்.
2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் திகதியிட்ட 1721/2 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளை ஊக்குவிப்பதோ, அவற்றுக்குச் சொந்தமான சின்னங்கள் மற்றும் கொடிகளைக் காட்சிப்படுத்துவதோ சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்ட விதிகளின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.” – என்றார்.
