எல்-நினோ தாக்கம்! தமிழ்நாட்டில் பாதிப்பு குறைவாகவே இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் எல்-நினோ தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எல்-நினோ தாக்கம் குறித்து சென்னை பள்ளிக்கரணையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மொக்பத்ரா பேசியதாவது, எல்-நினோ வலுவாக இருக்கும் காலத்தில் வெப்ப மண்டல புயல்களின் தீவிரம் குறைவாக இருக்கும்.
புயல் அமைப்புகள் இல்லாதபோது தமிழகத்தில் மழை குறையலாம். அக்டோபர் 15 முதல் 21 ஆம் தேதிக்குள் பருவமழை தொடங்கும். தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியான மழைப்பொழிவு இருக்கும்.
மேலும், எல்-நினோ தாக்கத்தால் தமிழகத்தில் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும். எல்-நினோ தாக்கம் ஏற்படும்போதிலும், தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஏற்படும் புயல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
தென்கிழக்கு வங்கக் கடலில் புயல்கள் உருவாகி, வடமேற்கு நோக்கி நகர்ந்தாலும், அவற்றின் தீவிரமும் புயல் பாதையின் நீளமும் குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.
