முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்த வலியுறுத்து!
ஆண்டின் நிறைவுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண திணைக்களங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்தி, அவற்றின் பயன்களை மக்களுக்கு விரைவாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க மற்றும் வடக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரின் (காணி) வரவேற்புரையுடன் கூட்டம் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், மத்திய மற்றும் மாகாண அரச நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றத்தை துரிதமாக மீளாய்வு செய்து, எஞ்சியுள்ள பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதன்போது, கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பிலும் கூட்டத்தில் ஆராயப்பட்டது. குறித்த வீட்டுத் திட்டத்துக்கான நிலுவைக் கொடுப்பனவுகள் அடுத்த ஆண்டு வழங்கப்படும் என அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 1,113 வீடுகள் அமைக்கப்படவுள்ளன என்றும், இந்த வீடுகள் வழங்கும் செயன்முறையில் எவ்விதப் பாகுபாடும் இடம்பெறவில்லை எனவும் இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும், சீன அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பொருத்து வீடுகள் திட்டம் தொடர்பான விடயங்களும் மாவட்டத்தின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளின் அடிப்படையில் ஆராயப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வளாகமொன்றை அமைப்பதற்காக காணி ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதற்கான திட்டமுன்மொழிவு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் கோரப்பட்டு, உரிய முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் யானைகளின் அச்சுறுத்தல் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. எதிர்காலத்தில் பிரதேச செயலர் பிரிவு ரீதியாக இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கான தனிப்பட்ட பொறிமுறையொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று வனஉயிரிகள் திணைக்களத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வடக்கு மாகாண சபையின் திணைக்களங்களின் ஊடாக 684 திட்டங்கள் 8,431 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றான் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் ஊடாக பல்வேறு திட்டங்களின் கீழ் 341 வேலைத்திட்டங்கள் 1,356 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்ட எட்டு திட்டங்களும் பரிசீலிக்கப்பட்டன.
மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலின்போது, வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்துடன் தொடர்புடைய காணி ஆக்கிரமிப்பு மற்றும் காணிப் பயன்பாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது, குறித்த விடயங்கள் தொடர்பில் அரசுக்குச் சில திணைக்கள அதிகாரிகளால் தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டி, நிலவரங்களை உரிய முறையில் நேரடியாக ஆராய்ந்து, உண்மையான தகவல்களின் அடிப்படையில் தீர்வுகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் மேய்ச்சல் தரை இன்மை, கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் அவர்களின் தேவைகளுடன் தொடர்புடைய விடயங்களும் ஆராயப்பட்டன.
மேலும், மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளை பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்கான நெற்களஞ்சியசாலை அமைப்பதன் தேவை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. விவசாயிகளின் உற்பத்திகளை அறுவடைக்குப் பின்னரும் பாதுகாப்பாகக் கையாளுவதற்கான உட்கட்டமைப்பின் அவசியம் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு அரச நிறுவனங்களில் காணப்படும் ஆளணி வெற்றிடங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கு தேவையான ஆளணியை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் மூலம் முன்வைக்கப்படும் மக்களின் பிரச்சினைகள், அவற்றுடன் தொடர்புடைய திணைக்களங்களின் ஒருங்கிணைப்புடன் நடைமுறைச் சாத்தியமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செ.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், கே.காதர் மஸ்தான், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், தவிசாளர்கள், முப்படையினர் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
