கறுப்பு ஜூலை போன்ற கலவரங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க புதிய அரசமைப்பு கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும்!

இலங்கையில் எதிர்காலத்தில் கறுப்பு ஜூலை போன்ற மற்றுமொரு இனக்கலவரம் உருவாகாமல் தடுப்பதற்குத் தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழக்கூடிய வகையிலான புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில், 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணையை ஆதரித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2001 இல் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கோரிய போதிலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் பொறிமுறை இருக்கவில்லை. பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த உண்மையை அறிவதுடன் குற்றவாளிகள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும். பட்டலந்த சித்திரவதை முகாம் விசாரணைகளைப் போன்று இதற்கும் முறையான விசாரணை தேவை.

போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, ஒட்டுமொத்த இராணுவத்தினருக்கும் தண்டனை வழங்குவதாகச் சிலர் தவறாகச் சித்தரிக்கின்றனர். குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் மட்டுமே சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு மாத்திரம் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கப்படுவதாக ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்த கருத்துக்கு அதிருப்தி வெளியிட்ட இரா. சாணக்கியன் எம்.பி., தாங்களும் இந்த நாட்டின் குடிமக்களே எனக் குறிப்பிட்டு, அனைத்து இன மக்களுக்கும் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக்கூடிய புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.