சவூதி சிறையில் அனோஜனை நேரில் சந்தித்த இலங்கைத் தூதர் – சட்ட உதவிகளை வழங்கத் தூதரகம் உறுதி.

சவூதி அரேபியாவில் மதநிந்தனைக் குற்றச்சாட்டின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவை, சவூதிக்கான இலங்கைத் தூதுவர் ஓ. எல். அமீர் அஜ்வாட் நேற்று பார்வையிட்டுள்ளார்.

தம்மாம் மத்திய சிறைச்சாலைக்குச் சென்ற அவர், அனோஜனைச் சந்தித்துப் பேசினார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பயணத்தின்போது தூதுவர், அனோஜனுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியதாக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“அவரது தேவைகளுக்கும், அவர் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அனோஜனுக்குத் தேவையான அனைத்துத் தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் வழங்கத் தூதரகம் உறுதிபூண்டுள்ளது” – என்றும் தூதுவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் நேரடித் தொடர்பை எளிதாக்கும் வகையில், தூதுவரின் தனிப்பட்ட தொடர்பு விவரங்களும் அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அனோஜன் சிவராசா நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றார் என்றும், சவூதி சிறை அதிகாரிகள் அவரது நலனில் உரிய கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இந்தப் பயணத்தின்போது இலங்கைத் தூதுவர் தம்மாம் மத்திய சிறையின் பணிப்பாளர் மற்றும் சிறை மருத்துவருடனும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.