போராட்டம் நடத்தச் சென்ற CJP நிறுவனர் விமானத்திலேயே கைது – விமான நிலையத்திற்குள் போலீசாருடன் கடும் வாக்குவாதம்
இந்தியாவின் டெல்லியில் திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு முன்னதாக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (Cockroach Janta Party – CJP) நிறுவனர் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை டெல்லியை வந்தடைந்த ஏர் இந்தியா வானூர்திக்குள் நுழைந்த டெல்லி காவல்துறையினர், அபிஜீத் தீப்கே மற்றும் கட்சி உறுப்பினர்களான சௌரவ் தாஸ், ஆஷுதோஷ் ரங்கா ஆகியோரைத் தடுத்து வைத்துள்ளனர்.
கட்சி உறுப்பினர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம்
இந்தச் சம்பவத்தை அபிஜீத் தீப்கே தனது இன்ஸ்டாகிராம் நேரலைக் காணொளியில் பதிவிட்டுள்ளார். வானூர்திக்குள் காவல்துறையினர் நுழைந்தபோது, கட்சி உறுப்பினர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக அந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களை வானூர்தியிலிருந்து வெளியேற அனுமதித்த பின்னர் கைது செய்திருக்கலாம் எனக் குறிப்பிட்ட கட்சி உறுப்பினர்கள், “எங்களைக் கைது செய்யுங்கள்; நாங்கள் அஞ்சவில்லை” எனக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த மூவரையும் வானூர்தி நிலையத்திலிருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
