அர்ச்சுனாவின் எம்.பி. பதவிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! – டிசம்பர் 16 இற்கு மாற்றியது மேன்முறையீட்டு நீதிமன்றம்.

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிய செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி அழைக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதிகளான மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதும் வாதங்களை விசாரிப்பதற்குரிய நீதிபதிகள் அமர்வு சரியாக அமைக்கப்படாத காரணத்தினாலேயே விசாரணையை மீண்டும் தொடங்க முடியாமல் போனது.

அத்துடன், அர்ச்சுனா சார்பில் ஆஜராகப் புதிதாக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் வேறு புதிய சட்டத்தரணிகள் குழுவை நியமிக்க உத்தேசித்துள்ளார் என்று நீதிமன்றத்துக்கு அறிவித்தமையுடன், முன்னர் ஆஜரான சேனானி தயாரத்ன இனிமேல் ஆஜராகமாட்டார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளான என். கே. அசோக்பரன் மற்றும் ஷெனால் பெர்னாண்டோ ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்த சந்தர்ப்பத்தில் அர்ச்சுனா அரச வைத்திய அதிகாரியாகப் பணியாற்றி வந்தார் என்றும், அரச அதிகாரிகள் பதவியில் இருக்கும்போது நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவதைத் தடுக்கும் அரசமைப்பு விதிகளின் கீழ் அவர் போட்டியிடத் தகுதியற்றவர் என்றும் மனுதாரர் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், வேட்புமனுத் தாக்கலின்போது சம்பளமின்றி வைத்தியர் பதவியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தமையால் அவரை அரச அதிகாரியாகக் கருத முடியாது என்று அர்ச்சுனாவின் சட்டத்தரணிகள் வாதிட்டிருந்தனர்.

இந்நிலையில், நீதிமன்றம் வழக்கு விசாரணையை டிசம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதால், நீதிமன்றம் வேறு உத்தரவுகளைப் பிறப்பிக்காத வரை வழக்கு நிலுவையில் இருக்கும் காலத்தில் அர்ச்சுனா தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.