ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு: சென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க முடிவு!

சென்னைக்கு அடுத்த இரண்டரை மாதங்களில் 3 டிஎம்சி நீரை வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு – தமிழக முதல்வர் விஜய் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர் குறித்தும், கோதாவரி – கிருஷ்ணா- காவிரி ஆகிய தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் குறித்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்த முதல்வர் விஜய் நேற்று (அக். 13) ஆந்திரத்திற்குச் சென்றார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக விஜயவாடா விமான நிலையம் சென்ற முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணா நதிக் கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள கனக துர்கா கோயிலுக்கு முதல்வர் விஜய் சென்றார்.

அங்கு முதல்வர் விஜய்க்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார்.

இதன் பிறகு, அமராவதியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இல்லத்துக்குச் சென்ற முதல்வர் விஜய், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், கிருஷ்ணா நதி நீர் திறப்பு குறித்தும் கோதாவரி – கிருஷ்ணா – காவிரி இணைப்பு குறித்தும் பேசியதாகத் தெரிகிறது.

இந்த சந்திப்பின்போது தமிழக நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, அமராவதி உற்சவ நவராத்திரி விழாவில் சந்திரபாபு நாயுடு உடன் முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ஆந்திர பாரம்பரிய நடனத்துடன் அரங்கேறிய கலை நிகழ்ச்சிகளை இரு மாநில முதல்வர்களும் அருகருகே அமர்ந்து கண்டுகளித்தனர்.

நிகழ்ச்சியில் முடிவில் தமிழக முதல்வர் விஜய்க்கும், அவருடன் சென்ற அமைச்சர்களுக்கும் மேடையில் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.