கொட்டும் மழைக்கு மத்தியிலும் தொடரும் நில மீட்புப் போராட்டம் – 26ஆவது வாரமாக மக்கள் வீதியில்…

யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தின் ‘கொமாண்டோ’ பங்களா முன்பாகக் கொட்டும் மழைக்கு மத்தியிலும் வெள்ளிக்கிழமையான இன்று 26ஆவது வாரமாக தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வலிகாமம் வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜே/248, ஜே/251, ஜே/255 மற்றும் ஜே/256 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதப் பகுதியில் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். அன்றிலிருந்து அப்பகுதிகள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டன.

போர் நிறைவடைந்து ஆண்டுகள் பல கடந்த போதிலும், பாதுகாப்புப் படையினர் அப்பகுதிகளிலிருந்து வெளியேறாததால் அவை இன்னமும் உயர் பாதுகாப்பு வலயமாகவே தொடர்கின்றன.

தமது சொந்த நிலங்களை மீளப் பெறுவதற்காகப் பல வருடங்களாகப் பல்வேறு வழிகளில் போராடி வரும் காணி உரிமையாளர்கள், தமக்கு நியாயம் கிடைக்கும் வரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பது என்று தீர்மானித்திருந்தனர்.

இதற்கமைய, மயிலிட்டிப் பகுதியில் இன்று கனமழை பெய்த போதிலும், அதைப் பொருட்படுத்தாது குடைகளைப் பிடித்தவாறும் மழையில் நனைந்தவாறும் மக்கள் தமது நில மீட்புப் போராட்டத்தை உறுதியுடன் தொடர்ந்து முன்னெடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.