மத்திய பிரதேசம்: கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி 12 பக்தர்கள் பலி; 39 பேர் காயம்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள ஷீத்லா மாதா கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த லாரி, பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்து மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சினோர் பகுதியில் இருந்து வந்த லாரி, அதிகாலை சுமார் 1.30 மணியளவில் சரிவான சாலையில் கட்டுப்பாட்டை இழந்தது. கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த அந்தச் சாலையில், போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்ற லாரி, பக்தர்கள் மீது மோதியதுடன் கோவிலின் நுழைவாயில் மற்றும் வெளிப்புறச் சுவரிலும் மோதி நின்றது.

இந்த விபத்தில் காயமடைந்த 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 முதல் 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்புப் பணியில் இருந்த 2 போலீசாரும் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. நவராத்திரியை முன்னிட்டு போலீஸ் சோதனைச் சாவடியும் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தடை செய்யப்பட்ட சாலைக்குள் லாரி எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

லாரியின் இயந்திரக் கோளாறு உள்ளிட்ட காரணங்களைக் கண்டறிய வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.