உயர்நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது இனவாதச் சூழ்ச்சிகளுக்கு ஒருபோதும் அடிபணியோம் – பதுளையில் ஜனாதிபதி அநுரகுமார முழக்கம்.

நாட்டில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்றும், சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமானது என்பதால் நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு எவருக்கும் நிவாரணம் வழங்க முடியாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பதுளை நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வரசு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“நாட்டில் பாரிய பிரச்சினைகள் நிலவுவதாகவும், தேசியம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சில ஊடகங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், களத்தில் மக்கள் மத்தியில் அவ்வாறான அச்சமோ அல்லது பிரச்சினைகளோ எதுவுமில்லை.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு படிப்படியாக மீட்சியடைந்து வரும் அதேவேளை, பொருளாதார ஸ்திரத்தன்மைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை அரசாங்கம் வழங்கியுள்ளது. அத்துடன், 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சில வரிகள் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.” – என்றார்.

பிள்ளைகளின் எதிர்காலத்துக்குச் சிறந்த கல்வியே அடித்தளம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,

“புதிய கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்த முற்படும் போது, பழைய முறைகளுக்குப் பழகிய சிலர் அதற்கு எதிராகச் சத்தியாகிரகப் போராட்டங்களை முன்னெடுத்தனர். எனினும், வரும் ஆண்டு முதல் புதிய கல்வி மறுசீரமைப்பு கட்டம் கட்டமாக நிச்சயமாக அமுல்படுத்தப்படும்.” – என்றார்.

இளம் தலைமுறையினருக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமாயின் சட்டத்தின் ஆட்சி கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர்,

“கடந்த காலங்களில் சட்டத்துக்கு மேல் தாம் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள், இன்று சட்டத்தின் கண்டிப்பைக் கண்டு அஞ்சுகின்றார்கள். தாம் செய்த குற்றங்களுக்கும் மோசடிகளுக்கும் சட்டம் எப்போது தம்மைத் தேடி வருமோ என்ற அச்சத்திலேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

நாட்டின் பொருளாதாரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சமூகக் கட்டமைப்பு குறித்துப் பேசுவதற்கு எதிர்க்கட்சியினருக்கு எவ்வித தகுதியும் கிடையாது. ஏனெனில், அவர்களே நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள். அரச நிதியைக் கொள்ளையடித்து, பாதாள உலகக் குழுக்களுக்கும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்கியவர்கள்.” – என்றார்.

எதிர்க்கட்சியினருக்குப் பேசுவதற்கு வேறு தலைப்புகள் இல்லாததால், தற்போது “இனமும் தேசியமும் அச்சுறுத்தலில் உள்ளது” என்று கூறிக்கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி,

“சில ஊடகங்களும் இவ்வாறான இனவாதப் பிரசாரங்களுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுகின்றன. தேசியத்துக்கு அச்சுறுத்தல் எனக் கூறி நாட்டில் மீண்டும் இனவாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயல்கின்றனர். அவ்வாறான சதிமுயற்சிகளுக்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இத்தகைய சூழ்ச்சிகளுக்கு மக்கள் தக்க பதிலளிப்பார்கள்.” – என்று எச்சரித்தார்.

Leave A Reply

Your email address will not be published.