செம்மணி என்புத் தொகுதிகளில் கைகளின் நிலை சீராக உள்ளதாம் இரகசியமான புதைப்பு போன்று தெரியவில்லை என்று பேராசிரியர் ராஜ் சோமதேவா அறிக்கை.

“யாழ்ப்பாணம் – செம்மணியில் மீட்கப்பட்ட என்புத் தொகுதிகளில் கைகளின் நிலை சீராகவே உள்ளது. என்புத் தொகுதிகளில் கைகள் வைக்கப்பட்டிருந்த முறை இரகசியமான அல்லது வழக்கத்துக்கு மாறான புதைப்பு போன்று தெரியவில்லை.” – என்று பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்துக்கு அறிக்கை வழங்கியுள்ளார்.

செம்மணிப் புதைகுழியில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்துக்கு அண்மையில் தனது தடயவியல் அறிக்கையை வழங்கினார். அந்த அறிக்கையின் ஒரு பகுதியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் உள்ள விடயங்களின் சாராம்சமாவது:-

“புதைக்கப்பட்ட ஒருவரின் கைகள் அமைந்திருந்த நிலை என்பது, இறந்தவரைப் புதைத்தவர்கள் அவரை எவ்வாறு கையாண்டனர் என்பதைப் புரிந்துகொள்வதற்கான முக்கியமான இறுதிச் சடங்கு அம்சமாகும். உடலின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டுடன் இணைத்துக் கருதும்போது, கைகளின் அமைவு புதைக்கும் செயலுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதுடன், இது பிரதானதொரு குறியீடாகவும் அமைகின்றது.

தடயவியல் விசாரணைகளில் ஆவணப்படுத்தப்பட்ட பல இரகசியமான அல்லது வழக்கத்திற்கு மாறான புதைப்புகளில், கைகள் ஒழுங்கற்ற அமைவிலேயே அடையாளப்படுத்தப்பட்டன. ஆனால், அத்தகைய நிலையில் இருந்து செம்மணி வேறுபடுகின்றது.

செம்மணியில் அகழாய்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்களில் கைகளின் அமைவு குறிப்பிடத்தக்க அளவுக்குச் சீராகக் காணப்பட்டது.

மரணத்துக்குப் பிந்தைய இடையூறுகளால் பாதிக்கப்பட்ட எலும்புக்கூடுகளைத் தவிர்த்து ஏனைய என்புத் தொகுதிகளில் கைகள் வயிற்றுப் பகுதியிலும், கைகள் உடலின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஒப்பீட்டளவிலான சீரான அமைவு, தளத்தில் பின்பற்றப்பட்ட புதைக்கும் நடைமுறைகளைப் பகுப்பாய்வு செய்வதில் முக்கியமான அவதானிப்பாகும்.

இருப்பினும், கைகளின் நிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அதன் பண்பாட்டு அல்லது நடத்தை சார்ந்த முக்கியத்துவத்தைத் தீர்மானிக்க முடியாது.

என்புச் சிதிலங்களின் ஒட்டுமொத்த உடற்கூறியல் அமைவு, மண்ணடுக்கியல் ஆதாரங்கள், தொடர்புடைய தொல்பொருள்கள் மற்றும் புதைகுழிகளின் பிற சூழல்சார் அம்சங்களுடன் இணைத்தே இதனை மதிப்பிட வேண்டும்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.