எதிர்க்கட்சிகள் என்னதான் ஆட்டம் போட்டாலும் மக்கள் மனதை அவர்களால் வெல்லவே முடியாது! – அடுத்த தடவையும் நாமே ஆட்சியமைப்போம்.

எதிர்க்கட்சிகள் எத்தகைய போராட்டங்களைச் செய்தும், என்னதான் ஆட்டம் போட்டாலும் மக்களின் மனங்களை அவர்களால் ஒருபோதும் வென்றுவிட முடியாது என்று அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் நாட்டைப் படுகுழியில் தள்ளி நாசமாக்கிய ஊழல், மோசடிக்காரர்கள் மீண்டும் இந்த நாட்டின் அரியணையில் ஏற மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் உண்மையான ஆதரவுடன் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும் தற்போதைய அரசின் பயணத்தை எந்தச் சக்தியாலும் தடை செய்ய முடியாது என்றும் அமைச்சர் அநுர கருணாதிலக மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.