ஞானசாரருக்கு ஒருபோதும் பொதுமன்னிப்பு இல்லை!

நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் நிலைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒருபோதும் செல்லமாட்டார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கே.எம். ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னைய ஆட்சிக்காலங்களில் இருந்த ஜனாதிபதிகளைப் போலத் தற்போதைய ஜனாதிபதி நீதித்துறை விவகாரங்களில் தன்னிச்சையாகத் தலையிட மாட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுயாதீனமான நீதிமன்றத் தீர்ப்புகளைக் கௌரவிப்பதும், சட்டத்தின் ஆட்சியை நாட்டில் முழுமையாக நிலைநாட்டுவதுமே தற்போதைய அரசின் முதன்மை இலக்காகும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரிப் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் மற்றும் அழுத்தங்கள் குறித்துக் சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசியல் அல்லது தனிப்பட்ட நலன்களுக்காக நீதித்துறை நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது ஜனநாயகத்துக்குப் புறம்பானது என்றும் தெரிவித்தார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடாகும் என்றும் அவர் கூறினார்.

கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்புகள் நாட்டின் சட்ட ஒழுங்கையும் நீதித்துறையின் நம்பிக்கையையும் சீர்குலைத்திருந்தன என்று குறிப்பிட்ட அவர், அத்தகைய தவறான முன்னுதாரணங்களை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு ஒருபோதும் பின்பற்றாது என்றும் உறுதியளித்தார்.

எனவே, சட்டச் செயல்முறைகளுக்குப் புறம்பாக ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என யாரும் எதிர்பார்க்கக் கூடாது என்று குறிப்பிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கே.எம். ஆனந்த விஜேபால, நாட்டின் நீதித்துறை கட்டமைப்புக்கு அனைவரும் மதிப்பளித்து நடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.