அபிவிருத்தி நிதியை செலவிட முடியாத கையாலாகாத அரசு – மனோ எம்.பி. கடும் தாக்கு.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 1,380 பில்லியன் ரூபாவில், செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையில் 385 பில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ள நிலையில், ஹட்டன் நகர அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 50 கோடி ரூபாவும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் மீண்டும் அரச திறைசேரிக்குத் திரும்பியுள்ளது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம் சாட்டினார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நடப்பு 2026 ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட மொத்த மூலதன அபிவிருத்தி நிதியில் 27.9 சதவீதம் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. மீதி 995 பில்லியன் ரூபா நிதி இன்னமும் செலவிடப்படாமல் முடங்கிக் கிடக்கின்றது. இதில் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகள் ஏதேனும் இருப்பின் அவற்றைக் கழித்த பின்னர், உண்மையில் எவ்வளவு தொகை பயன்பாடின்றி மீதமாக உள்ளது என்பதை அரசு உடனடியாக நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

வரவு – செலவுத் திட்ட உரையின் போது பாரிய நிதி ஒதுக்கீடுகளை அறிவித்துப் பெருமைப்பட்டுக்கொள்ளும் அரசு, அந்த நிதியை உரிய முறையில் அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்தத் தவறி வருகின்றது.

குறிப்பாக, ஹட்டன் நகர மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 50 கோடி ரூபா நிதி பயன்படுத்தப்படாமல் பத்திரமாகத் திரும்பியுள்ளது. முன்னதாக ஹட்டன் நகரில் ஒருவர் நடுவீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் படத்தை வைத்து, ‘எங்கள் குல சாமி’ எனக் கூறி கை கூப்பி வணங்கியிருந்தார். தற்போது ஹட்டன் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியே பயன்படுத்தப்படாமல் திரும்பியுள்ள நிலையில், ‘குல சாமி’ எனக் கொண்டாடிய அந்தக் ‘குலவிளக்கை’ நான் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

ஒதுக்கப்படும் நிதி உரிய திட்டமிடல் மற்றும் திறமையின்மை காரணமாகப் பயனில்லாமல் மீண்டும் திரும்புகின்றது என்றால், தற்போதைய அரசின் ‘கையாலாகாத்தனத்துக்கு’ இதைவிட வேறு சான்று எதுவும் தேவையில்லை.

மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், ஒதுக்கீட்டு நிதியைக் கூடச் செலவழிக்க முடியாத நிர்வாகச் சீர்கேட்டையே இது வெளிப்படுத்துகின்றது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம் தொடர்பான அமைச்சு வாரியான முழுமையான விவரங்களைப் பெற்றுத் தருமாறு நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் ஊடாக பொது நிதிக் குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

வரும் 2027 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிப்பதற்கு முன்னர், இந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாடு குறித்து அரசு வெளிப்படையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.