தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்: காவலர்கள் மீது தாக்குதல்!

ஆண்டிபட்டி: தேனி மாவட்ட சிறையில் நேற்று இரவு சிறைக் காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பியோடினர். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தப்பியவர்களில் ஒரு கைதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கண்டமனூர் அருகே உள்ள தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு ஒரே அறையில் விழுப்புரத்தைச் சேர்ந்த லிங்கம், ராஜா சிக்கந்தர், கருப்பசாமி, சிலம்பரசன், திருப்பதி, மீனாட்சி சுந்தரம், சபரி உள்ளிட்ட 17 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறி சிறை வார்டனை அழைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறைக் காவலர் தங்கப்பாண்டி உள்ளிட்ட இரண்டு காவலர்கள் சிறையின் அறை கதவைத் திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கிருந்த மற்ற கைதிகள் திடீரென அவர்களை கடுமையாக தாக்கினர்.

பின்பு அனைவரும் அங்கிருந்து தப்பியோடினர். இதில் காவலர் தங்கப்பாண்டிக்கு தலையில் பலத்த காயமும், மற்ற இவருக்கும் லேசான காயமும் ஏற்பட்டது. இவர்களுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கைதிகள் தப்பிய தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் நேரில் சென்று சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து தென்மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிடாரி சிறைக்கு வந்து ஆய்வு நடத்தினார்.

சிறைச்சாலையைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேனி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் பணியை மும்முரப்படுத்தியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

சிறைச்சாலை பகுதியைச் சுற்றிலும் உள்ள வயல், மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது தப்பியோடிய கைதிகளில் ஒருவரான பிரவீன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து இவரை சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து நள்ளிரவு முதல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தப்பியோடியவர்களில் பலர் மதுரை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என வெளியாகியுள்ள தகவலையடுத்து, அந்த மாவட்டங்களிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

மாவட்ட சிறைச்சாலையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி 17 சிறைக் கைதிகள் தப்பி உள்ள சம்பவம் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் போலீஸாரின் பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.