தாயகம் திரும்பிய போது கட்டுநாயக்கவில் கைதான கந்தசாமி கிருஷ்ணகுமார் இன்று பிணையில் விடுதலை.

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய வேளையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட நபர், வழக்கு விசாரணைகளுக்காக இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – மாசியப்பிட்டி, அம்மன் கோவிலடியைச் சேர்ந்த கந்தசாமி கிருஷ்ணகுமார் (வயது 50) என்பவரே இவ்வாறு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவராவார்.

கடந்த 26 ஆம் திகதி தமிழகத்தில் இருந்து விமானம் மூலம் இலங்கை திரும்பிய போதே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமார், மேலதிக விசாரணை மற்றும் வழக்கு நடவடிக்கைகளுக்காகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே நீதிவான் அவரைப் பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணையின் அடுத்த தவணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட கிருஷ்ணகுமார் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் வச்சுக் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார்.

அதன் பின்னர் திருச்சி சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையிலேயே தாய்நாடு திரும்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.