அரசுப் பணி நியமன வயது உச்சவரம்பை உயர்த்தியது தமிழக அரசு!
தமிழ்நாடு அரசு வேலைக்கு லட்சக்கணக்கானோர் முயற்சித்து தேர்வு எழுதி வரும் சூழலில், நியமனத்துக்கான உச்சவரம்பை உயர்த்த வேண்டுமென போட்டித்தேர்வர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், போட்டித்தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று நேரடி நியமனத்துக்கான உச்சவரம்பை தற்போதைய விதிகளில் உள்ளதை விட 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அரசுப்பணி நியமனத்துக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு
இந்த வயது வரம்பு உயர்வானது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (BC, BC(M), MBC & DNC, SC, ST, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயதுச் சலுகையோடு கூடுதலாக அமையும்.
இந்த வயது உச்சவரம்பு உயர்வு, இன்று முதல் 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும்.
இதன் மூலம், குரூப்-1 தேர்வுகளுக்கு பொதுப்பிரிவினருக்கு 32 ஆக இருந்த வயது வரம்பு தற்போது 37 ஆகவும், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 37 ஆக உள்ள வயது வரம்பு தற்போது 42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு வயது 42 ஆக இருந்த வயது வரம்பு தற்போது 47 ஆகவும், ஒதுக்கீடு பிரிவினருக்கு 52 ஆக உள்ள வயது வரம்பு தற்போது 57 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுகளுக்கு தற்போது பொதுப்பிரிவினருக்கு 30 ஆக உள்ள வயது வரம்பு தற்போது 35 ஆகவும், மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு 40 ஆக உள்ள வயது வரம்பு தற்போது 45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. குரூப் 4 தேர்வுகளுக்கு (உயர் கல்வித்தகுதி அல்லாதவர்கள்) பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 30 இல் இருந்து 35 ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான வயது வரம்பு 32 இல் இருந்து 37 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 40 இல் இருந்து 45 ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பு 42 இல் இருந்து 47 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
