தேனி அருகே சோகம்: விடுமுறை நாளில் ஆற்றில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஆற்றில் குளித்த 7-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) நீரில் மூழ்கி பலியாகினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மகன் மிதுன் சத்யா (14) மற்றும் முத்தையா என்பவரின் மகன் பாலு தர்ஷன் (14) ஆகிய இரு சிறுவர்களும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர்.
இன்று வார விடுமுறை தினம் என்பதால், சிறுவர்கள் இருவரும் தங்களது நண்பர்களுடன் மேல்மங்கலம் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள கருங்கல் என்று பகுதியில் உள்ள வராக நதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்ற மிதுன் சத்யா மற்றும் பாலு தர்ஷன் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், உடனடியாக சத்தமிட்டு அருகிலிருந்தவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அருகில் உள்ள தோட்டங்களில் பணியில் இருந்த விவசாயிகள் விரைந்து வந்து, ஆற்றுக்குள் மூழ்கிய இரண்டு சிறுவர்களையும் மீட்டனர்.
உடனடியாக பெற்றோர் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நீரில் மூழ்கி, மீட்கப்பட்ட இரு சிறுவர்களும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிறுவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, சிறுவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து மேல்மங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுமுறை நாளில் ஆற்றில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த இச்சம்பவம், மேல்மங்கலம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
