லடாக்கில் உலகின் மிக உயரமான ரயில் நிலையம்!

லடாக்,

சீனாவை முந்தி இந்திய ரெயில்வே புதிய உலக சாதனை படைக்க உள்ளது; லடாக்கில் 17,244 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான ரெயில் நிலையம் அமையவுள்ளது. இமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூரில் இருந்து லடாக்கின் லே வரை ரூ.1.31 லட்சம் கோடி மதிப்பீட்டில் உருவாகும் இந்த பாதை, சீனாவின் ‘டாங்குலா’ ரெயில் நிலையத்தின் சாதனையை முறியடிக்கிறது.

உலகின் மிக உயரமான ரெயில் நிலையம்

இமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து மணாலி வழியாக லடாக்கின் தலைநகர் வரை 489 கி.மீ. தொலைவுக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்த பிரமாண்ட மெகா திட்டத்திற்காக ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு கணக்கிடப்பட்டுள்ளது. லடாக் பகுதியின் டாங்லாங்லா கணவாய் அருகே, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17,244 அடி (5,256 மீட்டருக்கு மேல்) உயரத்தில் உலகின் மிக உயரமான ரெயில் நிலையம் உருவாகிறது.

சிறப்பு பெட்டிகள்
இமயமலையின் கரடுமுரடான நிலப்பரப்பை கடக்க, மொத்தமுள்ள 489 கி.மீ. தூரத்தில் சுமார் 270 கி.மீ. தொலைவுக்கு மலைகளை குடைந்து சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன. அதிக உயரத்தில் நிலவும் கடும் குளிர் மற்றும் ஆக்சிஜன் குறைபாட்டை பயணிகள் சமாளிக்க ஏதுவாக, வெப்பமூட்டப்பட்ட மற்றும் காற்றழுத்தம் சீராக்கப்பட்ட நவீன ரெயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

சீனாவின் சாதனை முறியடிப்பு
இதுவரை திபெத்தில் உள்ள சீனாவின் ‘டாங்குலா’ ரெயில் நிலையமே உலகின் மிக உயரமான ரெயில் நிலையமாக இருந்தது. இதன் உயரம் சுமார் 5 ஆயிரத்து 68 மீட்டராக (16 ஆயிரத்து 627 அடி) உள்ளது. தற்போது இந்தியாவின் புதிய ரெயில் நிலையம் அதனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கிறது.

பாதுகாப்பு அரண்
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டியுள்ள லடாக் பகுதிக்கு, கடும் பனிப்பொழிவு காலங்களிலும் ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை தங்கு தடையின்றி மிக விரைவாக கொண்டு செல்ல இந்த ரெயில் பாதை இந்திய ராணுவத்திற்கு பெரும் பலமாக அமையும்.

Leave A Reply

Your email address will not be published.