போதை நரகாசூரனை வேரோடு ஒழிப்போம்! – மாத்தளையில் தேசிய தீபாவளி விழாவில் பிரதி அமைச்சர் பிரதீப் முழக்கம்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், மாத்தளை மாவட்ட செயலகம் மற்றும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பரிபாலன சபை ஆகியன இணைந்து நடத்திய தேசிய தீபாவளி விழா நேற்று சனிக்கிழமை மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மண்டபத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நேற்றுக் காலை விசேட பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபம் ஏற்றப்பட்டதுடன், கலை மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் கூடிய வண்ணமயமான வீதி ஊர்வலமும் மாத்தளை நகரை வலம் வந்து தேவஸ்தானத்தைச் சென்றடைந்தது.

இந்து சமூகத்தின் பாரம்பரிய அரிய மரபுகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதுடன், தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கண்டி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி உயர்ஸ்தானிகர் வி. எஸ். சரண்யா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், சமயத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இருள் நீங்கி ஒளி பரவும் உன்னத பண்டிகையான இந்தத் தீபாவளித் திருநாளை முன்னிட்டு, இலங்கைத் தபால் திணைக்களத்தின் சிறப்பு நினைவு முத்திரையொன்றும் இதன்போது வெளியிடப்பட்டது.

விழாவில் சிறப்புரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,

“நாட்டைச் சீரழிக்கும் போதைப்பொருள் கலாசாரமானது மனிதர்களின் நிம்மதியையும் சந்தோஷத்தையும் கெடுத்து வாழ்வில் இருளைப் புகுத்துகின்றது. இந்த கொடிய ‘போதை நரகாசூரனை’ எமது சமூகத்திலிருந்து வேரோடு ஒழிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்துள்ள போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் அனைவரும் இன, மத பேதமின்றி முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், மாத்தளை மாவட்டம் மலையக வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த முக்கிய மாவட்டமாகும் என்றும், பல வரலாற்றுத் துன்பங்களைக் கடந்து வந்த மலையக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க அரசு பாடுபட்டு வருகின்றது என்றும் குறிப்பிட்டார்.

குறிப்பாக மக்களின் வாழ்க்கையில் இருளை நீக்க காணி உரிமை, புதிய வீட்டுத் திட்டம், கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விழாவில் தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பாடப்பட்டமை மிகவும் வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்ட பிரதி அமைச்சர், இது ஏனைய இனத்தவர்கள் மற்றைய இனத்தின் கலாசாரத்தைப் புரிந்துகொள்ளக் கிடைத்த அருமையான வாய்ப்பு என்றும் பாராட்டினார்.

தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இன வேறுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகளாக ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விழாவில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் உட்பட இந்து கலாசாரத்தின் செழுமையான பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.