பட்டாசு புகையால் ஸ்தம்பித்த சென்னை: தரையிறங்க முடியாமல் தவித்த 11 விமானங்கள்!

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். தமிழகத்தில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அந்த நேரத்தில் ஒட்டுமொத்தமாக மக்கள் பட்டாசுகளை வெடித்து குவித்தனர்.

சென்னையில் இரவு 7 மணி ஆனதும் வானம் வர்ணஜாலமாக மிளிர்ந்தது.அதே நேரம் அதிகம் பேர் பட்டாசு வெடித்ததால் சென்னை நகரில் புகை மூட்டம் நிலவியது. பட்டாசு வெடித்ததால், நகர் முழுக்கவே புகைமூட்டமாக காட்சி அளித்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சாலை கூட தெரியாத அளவுக்கு புகை மூட்டம் நிலவியது. உலக அளவில் அதிக காற்று மாசு உள்ள நகரங்களில் ஒன்றாக சென்னை மாறிப்போனதாகவும் செய்திகள் வெளியாகின.

விமானங்கள் தாமதம்
இதற்கிடையே, சென்னையில் நிலவிய கடும் புகை மூட்டத்தால் 11 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துள்ளன. சிறிது நேரம் வானில் வட்டமடித்து தாமதமாக தரையிறங்கியுள்ளன. அதேபோல, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளன. சென்னையில் நிலவும் கடுமையான புகை மூட்டத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

திருப்பிவிடப்பட்ட இண்டிகோ விமானம்
ராய்ப்பூரில் இருந்து 156 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ விமானம், தரையிறங்க முடியாமல் பெங்களூர் திருப்பி விடப்பட்டது. காற்று மாசு குறையதொடங்கியுள்ள நிலையில் தற்போது விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.