இனிப்பான குழந்தைகள் தினம்: கொளத்தூரில் மாணவர்களுக்கு கேக் வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
சென்னை: நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, நடப்பாண்டு பள்ளி மாணவர்களுக்கு மதிய சத்துணவுடன் கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கடந்த அக்டோபர் 11-ம் தேதி ரூ.9.27 கோடி மதிப்பில் குறுகிய கால டெண்டர் வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில் 4 பிரபல நிறுவனங்களுக்கு கேக் விநியோக ஒப்பந்தம் வழங்கப்பட்டு சுமார் 45 கிராம் மதிப்புடன் மொத்தம் 62 லட்சத்து 46 ஆயிரத்து 412 கேக் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் பிரிட்டானியா நிறுவனம் 45 கிராம் எடையுள்ள 10 லட்சத்து 3,996 கேக்குகளையும், ட்ரீம் பேக் நிறுவனம் 45 மற்றும் 50 கிராம் எடையுள்ள 33 லட்சத்து 87,459 கேக்குகளையும் வழங்கி உள்ளது.
எலைட் நேச்சுரல் நிறுவனம் 45 கிராம் எடையுள்ள 10 லட்சத்து 6,861 கேக்குகளையும், ஐடிசி நிறுவனம் 43.2 கிராம் எடையுள்ள 8 லட்சத்து 48,096 கேக்குகளையும் தயாரித்துள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக குழந்தைகள் தினத்தையொட்டி அரசு சார்பில் முதல்வர் விஜய் இன்று காலை 9 மணிக்கு கொளத்தூரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கேக்குகளை வழங்கி தொடங்கி வைக்கிறார்.
முதலில் இந்த திட்டத்தை அம்பாசமுத்திரம் தொகுதியில் முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொளத்தூருக்குத் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொளத்தூரில் தொடங்கி வைக்கப்படும் அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட இருக்கிறது. இதில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 2.90 லட்சம் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கப்படுகிறது.
