கல்வித்துறைக்கு 409 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றும் – சஜித்தின் விமர்சனங்களுக்குப் பிரதமர் ஹரிணி பதிலடி.
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்காக 409 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மொத்த அரச வருவாயில் 12.12 சதவீத நிதி இதற்காகச் செலவிடப்படுகின்றது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் எதிர்க்கட்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. நிறைவடைந்த இரண்டு ஆண்டுக் காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்புகின்றார். கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை வெற்றிகரமாக மீண்டுள்ளதுடன், நாட்டின் நிதி ஒழுக்கம் பேணப்பட்டுள்ளது என்று சர்வதேச நிதி நிறுவனங்கள் சான்றுப்படுத்தியுள்ளன. இதனை எதிர்க்கட்சித் தலைவர் அறியாமல் இருப்பது வேடிக்கையானது. அரசியல் இலாபத்துக்காக எதையும் பேசலாம் என்ற நிலையில் இருந்து கொண்டு கருத்துக்களை முன்வைக்கக் கூடாது.
நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை எதிர்க்கட்சித் தலைவர் அறியவில்லையா? தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளை அவர் சுட்டிக்காட்டுகின்றார். எமது வாக்குறுதிகளை எமக்கு நினைவுபடுத்த வேண்டிய அவசியம் கிடையாது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும்.
கல்வி, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்துக்காகவே இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலையான பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டே இந்த வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு இதுவரையில் ஸ்மார்ட் பலகைகள் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகின்றார். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுக் காலப்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு 4 ஆயிரத்து 570 ஸ்மார்ட் பலகைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் கலாசாலைகளில் காணப்பட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. கல்வி மறுசீரமைப்புக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கல்வி என்பது மிகச் சிறந்ததொரு முதலீடாகும். கல்விக்காக 6 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற இலக்கை இந்த அரசு நிச்சயம் அடைந்து கொள்ளும்.
அரச சேவையை அரசு மலினப்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகின்றார். ஆனால், அவர் கடந்த காலங்களில் எவ்வாறான அடிப்படையில் அரச சேவைக்கு நியமனங்களை வழங்கினார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அரசியல் பரிந்துரைகளுக்கு அமைய நாங்கள் எவருக்கும் நியமனங்களை வழங்கவில்லை. முறையான தகுதி மற்றும் போட்டிப் பரீட்சை ஊடாகவே அரச நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கல்வித் தகைமைக்கு அமைய நியமனங்களைப் பெற்றால்தான் அரச சேவையாளர்கள் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் சேவையாற்றுவார்கள்.
நாட்டின் எதிர்காலத்தையும் நிலையான பொருளாதாரத்தையும் கருத்திற்கொண்டு, அரசியல் நோக்கங்களை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எனவே, அரசின் செயற்பாடுகள் தொடர்பில் ஆக்கபூர்வமான மற்றும் அறிவுபூர்வமான விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்குமாறு எதிர்க்கட்சியினரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.
