2027 வரவு – செலவுத் திட்டத்தை நடுநிலையாக ஆராய வேண்டும் – புத்திஜீவிகளிடம் ஆளும் கட்சி எம்.பி. தேவானந்த சுரவீர வேண்டுகோள்.
நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகரமாக மீட்டெடுத்து, உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதற்கான உறுதியான அடித்தளத்தை அரசு வெற்றிகரமாக இட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 2024ஆம் ஆண்டு நாம் நாட்டைப் பொறுப்பேற்கும் போது, முழுமையாக வீழ்ச்சியடைந்து மரண விளிம்பில் இருந்த ஒரு நாடே எமக்குக் கிடைத்தது. உற்பத்திப் பொருளாதாரம், முதலீடுகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மேம்பாடு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சமூக நீதியை முழுமையாக மையமாகக் கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரவு – செலவுத் திட்டத்தையே நாம் தற்போது முன்வைத்துள்ளோம். இதனை நாட்டின் புத்திஜீவிகள் எந்தவித அரசியல் பக்கச்சார்புமின்றி நடுநிலையாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
நாட்டின் டொலர் கையிருப்பைத் படிப்படியாக அதிகரித்து, ரூபாவைப் பலப்படுத்தி, கடந்த காலத்தில் முற்றிலுமாக வீழ்ச்சியடைந்திருந்த அனைத்துத் துறைகளையும் மீளக் கட்டியெழுப்புவதற்கான மிக உறுதியான அடித்தளத்தை இந்த அரசு வெற்றிகரமாக இட்டுள்ளது.” – என்றார்.
