முதல் பெண் மாவீரர் மாலதி நினைவேந்தல் நிகழ்வு: கஜேந்திரன், பொன்மாஸ்டர் விசாரணைக்கு அழைப்பு!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் அக்கட்சியின் செயற்பாட்டாளர் ‘பொன்மாஸ்டர்’ என அழைக்கப்படும் செல்லத்துரை பொன்குணரத்தினம் ஆகியோருக்கு, கோப்பாய் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தமை தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸாரால் கடிதம் மூலம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், செல்வராசா கஜேந்திரன் இன்று முற்பகல் 9.00 மணிக்கும், ‘பொன்மாஸ்டர்’ என அழைக்கப்படும் செல்லத்துரை பொன்குணரத்தினம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மாவீரர் துயிலும் இல்லங்களை மக்களிடம் கையளிப்போம், நினைவுகூரும் உரிமையை அரசு தடுக்காது என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்டத் தரப்பினர் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், அதற்கு முரணாகக் களத்தில் பொலிஸாரின் இவ்வாறான விசாரணை மற்றும் கெடுபிடி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அரசின் கொள்கைக்கும் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கும் இடையிலான இந்த முரண்பாடு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
………………
