இலங்கையில் பரவி வரும் இன்புளுவென்சா வைரஸ் – சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை.

இலங்கையில் இன்புளுவென்சா சுவாச வைரஸ் தொற்று பரவி வருவதால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுபவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தத் தொற்று தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் அல்லது பேசும்போதும் வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் இந்தத் தொற்று இலகுவில் பரவும் என்று சிரேஷ்ட விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

திடீரெனத் தோன்றும் காய்ச்சல், குளிர், தொடர்ச்சியான இருமல் மற்றும் அதிக சோர்வு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். சிலருக்கு நிமோனியா போன்ற தீவிர சுவாசப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நீரிழிவு, இதய நோய், ஆஸ்துமா, சிறுநீரக நோய் உள்ளவர்கள் இந்தத் தொற்றால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் பிரிவினராக உள்ளனர்.

அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், அறிகுறிகள் தென்பட்டால் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்தல் மற்றும் சுயமாக மருந்துகள் எடுப்பதைத் தவிர்த்து உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறுதல் ஆகிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பொதுவாக மே – ஜூலை மற்றும் நவம்பர் – ஜனவரி ஆகிய காலப்பகுதிகளில் இன்புளுவென்சா பாதிப்பு அதிகரித்துக் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.