காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனு
புதுடெல்லி: காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றத் தடை விதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிதாக இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த விவகாரம் இரு மாநிலங்களுக்கிடையே மீண்டும் சட்டரீதியான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்குக் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கவும் அதைத் தேசியத் திட்டமாக அறிவிக்கக் கோரியும் 2021 ஜனவரி 5ஆம் தேதி தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.
அதனை எதிர்த்துக் கர்நாடகா அரசு தாக்கல் செய்த முந்தைய இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அப்போதைய நிலவரப்படி மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கவில்லை எனக் கூறி, 2025 ஜனவரி 20ஆம் தேதி வழக்கை முடித்து வைத்தது.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுவில், காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவைவிடக் கூடுதலாக எடுத்துக்கொள்ள உரிமை கிடையாது எனக் கர்நாடகா வலியுறுத்தியுள்ளது.
மேலும், பில்லிகுண்டுலுவுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள நீர் கர்நாடகாவுக்குச் சொந்தமானது எனத் தீர்ப்பில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, கர்நாடகாவுக்கான நீரை மடைமாற்றிச் சேகரிக்கும் வகையில் அமையவுள்ள காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்கக் கூடாது என்றும், தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேட்டூரில் இருந்து உபரி நீரைச் சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளில் சேகரிக்கும் சரபங்கா திட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது உள்ளிட்ட பிற திட்டங்களின்கீழ் தமிழகத்திற்குச் சொந்தமில்லாத காவிரி நீரைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்தில் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ள கட்டுமானங்களை இடிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
