ஆணுக்கு 75, பெண்ணுக்கு 63: முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்; கோலாகலமாக நடந்த திருமணம்!

இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ‘அப்னா கர்’ முதியோர் இல்லத்தில், 75 வயதான கன்ஹையா லால் மற்றும் 63 வயதான சபீனா ஆகியோர் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.

முதியோர் இல்லவாசிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் நலங்கு சடங்குகள் மற்றும் மாலை மாற்றுதலுடன் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

மனைவியின் மறைவுக்கு பிறகு சகோதரர்களால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, 2022-ஆம் ஆண்டு குகையில் வசித்து வந்த கன்ஹையா லாலை முதியோர் இல்லத்தினர் மீட்டு அடைக்கலம் கொடுத்தனர்.

அதேபோல், கொல்கத்தாவை சேர்ந்த சபீனா வீட்டை விட்டு வெளியேறி இமாச்சல பிரதேசம் வந்த நிலையில், 2025-ஆம் ஆண்டு இந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டார். ஒரே இல்லத்தில் வசித்து வந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட புரிதலால், வாழ்நாளின் இறுதிக்காலத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க முடிவு செய்து திருமணம் செய்துகொண்டனர்.

இந்த விழாவில் பிலாஸ்பூர் துணை ஆணையர் கிரண் பதானா நேரில் கலந்துகொண்டு மணமக்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினார். வயது என்பது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தடையல்ல என்பதை இந்த திருமணம் சமூகத்திற்கு உணர்த்தியுள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.