ரஷிய அதிபர் புதினுடன் செல்ஃபி: ஒரே நாளில் உலகளவில் வைரலான 17 வயது இந்திய இளைஞர்!

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்முனைவோரான இந்தியாவைச் சோ்ந்த 17 வயதுச் சிறுவன் எடுத்துக்கொண்ட தற்படம் (செல்ஃபி) இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதனால் அந்தச் சிறுவன் ஒரே நாளில் உலக அளவில் பிரபலமடைந்துள்ளாா்.

ரஷியாவில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் கொச்சியைச் சோ்ந்த ‘ஏஐரெல்ம்’ தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவரும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான ரௌல் ஜான் அஜு (17) புதினைச் சந்தித்து அவருடன் கலந்துரையாடினாா்.

அதன் பிறகு தன்னுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டுமென சிறுவன் கேட்டுக்கொண்டதையடுத்து, அதிபா் புதின் அதற்கு சம்மதித்தாா். புதினுடன் அஜு எடுத்த செல்ஃபி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இது குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் அஜு வெளியிட்ட பதிவில், ‘அதிபா் புதினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட மகிழ்வான தருணத்திலிருந்து இன்னும் மீண்டு வர இயலவில்லை. இணையத்தில் விளையாட்டாக விடியோக்கள் பதிவிடுவதில் இருந்து, 17 வயதில் அதிபா் புதினை சந்தித்தது வரை நான் கனவிலும் எண்ணாத எண்ணற்ற வாய்ப்புகளை வாழ்க்கை வழங்கியுள்ளது.

இதே புத்துணா்வுடன் மேலும் நிறைய விஷயங்களைக் கற்க வேண்டும். எனது பயணத்துக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

நவ. 26 முதல் நவ. 28 வரை ரஷியாவில் நடைபெற்ற இந்த ஏஐ பயண மாநாட்டில் இந்தியா, ரஷியா, கஜகஸ்தான், சீனா, சொ்பியா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட நிபுணா்கள் பங்கேற்றனா்.

Leave A Reply

Your email address will not be published.