புரேவி சூறாவளி முல்லைத்தீவு மாவட்டத்தில் 601 குடும்பங்கள் பாதிப்பு!

புரேவி சூறாவளி முல்லைத்தீவு மாவட்டத்தில் 601 குடும்பங்கள் பாதிப்பு!

வங்களா விரிகுடாவில் ஏற்பட்ட புரேவி சூறாவளியின் தாக்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 601 குடும்பங்களை சேர்ந்த 1796 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று(03) மாலை 4.00மணி வரை திரட்டப்பட்ட பள்ளி விபரங்களின் அடிப்படையில் 1 வீடு முழுமையாகவும், 36 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த புயலில் இருந்து கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கடற்கரையினை அண்மித்த பகுதிகளில் குடியிருந்தவர்களின் பாதுகாப்பு கருதி செவ்வாய்க்கிழமை(01) தொடக்கம் கருணாற்றுக்கேணி அரசினர் தழிழ் கலவன் பாடசாலை, கொக்குளாய் மேற்கு அரசினர் தழிழ் கலவன் பாடசாலை, கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயம், கொக்குத்தொடுவாய் மத்தி ஆரம்பப்பாடசாலை ஆகிய 4 பாதுகாப்பு அமைவிடங்களில் 130குடும்பங்களை சேர்ந்த 447 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் நேற்று(03) மாலையில் பாதுகாப்பு அமைவிடங்களில் இருந்து மக்கள் தமது குடியிருப்புக்களுக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது 2 பாதுகாப்பு அமைவிடங்களில் 92 குடும்பங்களை சேர்ந்த 282பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 123 குடும்பங்களை சேர்ந்த 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளன.

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 210 குடும்பங்களை சேர்ந்த 533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 181 குடும்பங்களை சேர்ந்த 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 43 குடும்பங்களை சேர்ந்த 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 34 குடும்பங்களை சேர்ந்த 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 04 வீடுகள் பகுதி சேதம் அடைந்துள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 01வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

பாதிப்பு ஏற்பட்ட விபரங்கள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்தும் திரட்டப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.