மக்கள் நீதி மையம் கட்சியின் கொள்கை, வியூகம் குறித்து ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் நேர்மை-கமல்ஹாசன்

மக்கள் நீதி மையம் கட்சியின் கொள்கை, வியூகம் குறித்து ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் நேர்மை என கூறுவோம்,’ என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜர் நகரில் இளைஞர்கள் மற்றும் மகளிர் உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: இந்தியா பன்முகத்தன்மை கொண்டது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. நமது பன்முகத்தன்மையை சிதைக்க முற்படுபவர்களை நாம் விடக்கூடாது. எங்கெல்லாம் ‘ஒரே’ என்னும் சொல் வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரம் ஆரம்பமாகும். ஒரே நாடு ஒரே பிரதமர் என்கிற திட்டத்தில் சிலர் செயல்படுவது போல் உள்ளது. அடிப்படைவாதிகளிடம் இருந்து அரசியலை மீட்டெடுக்க வேண்டிய கடமை உள்ளது.

நல்ல அதிகாரிகள், நல்ல கல்வியாளர்கள் இருக்க முடியவில்லை என தவிக்கும் நிலைக்கு தள்ளிய அரக்க குணமுள்ள இந்த அரசு நீக்கப்பட வேண்டும். தமிழன் எந்த மொழியையும் படிக்க தயாராவான்., பிடித்தால் படிப்பான், திணித்தால் திணித்த கையிலேயே துப்பிவிடுவான். நான் நடித்த மொழிகளிலேயே தமிழ் மொழியை விட சிறந்தது இல்லை. வெறும் 25 ஆயிரம் பேர் பேசும் மொழியை ஏழரை கோடி மக்கள் மீது திணிப்பதை ஏற்க முடியாது. கடவுள் இருப்பதை நிரூபித்தால் ஏற்றுக்கொள்வீர்களா என கேட்கின்றனர். நிரூபித்தால் ஏற்றுக்கொண்டு தானே ஆகவேண்டும்.

தமிழகத்தை ஒரு டிரில்லியன் பொருளாதார நிலைக்கு உயர்த்துவதே நோக்கம். ஊழலுக்கு வழியில்லா வெளிப்படையான டெண்டர்களை செய்தாலே இரண்டு தமிழகத்தை கட்டமைக்கலாம். மக்கள் நீதி மையம் ஆட்சிக்கு வந்தால், அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் வெளிப்படையாக நடக்கும். லஞ்ச ஒழிப்பு மேல் மட்டத்தில் இருந்து தொடங்கி கீழ் மட்டம் வரையில் ஒழிக்கப்படும். அரசின் திட்டங்களை நீங்கள் தேடி செல்லாமல், உங்களை தேடி வரும் தொலைநோக்கு திட்டங்கள் உள்ளன. அதை ஆட்சியாளர்களிடம் கொடுத்தால் டெண்டர், கமிஷனை எதிர்பார்த்து, இதை கிடப்பில் போட்டுவிடுகின்றனர்.

இளம் தொழில் முனைவோர்க்கு ஊக்குவிப்பை தருவோம். பன்முகத்தன்மை கல்வியிலும் இருக்க வேண்டும். சம்பளத்திற்கு வேலை வாங்கித்தரும் தொழிலாளிகளை உருவாக்குவதை விட, தொழில் செய்யும் முதலாளிகளாக மாற்றுவதே நோக்கம். விவசாயத்தில் பல மாற்றங்களை, புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படும்.

திருடன்: திருடும் பணத்தை விட்டுவைத்தாலே இப்படியான பல திட்டங்களை தமிழகத்தில் நடத்திவிட முடியும். கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் செய்தால் திருடன், அமைச்சர்கள் செய்தால் ஊழல் என மாறி மாறி பெயர் இருந்தாலும், என்னை பொருத்தவரையில் அனைவரும் திருடன் தான்; வேறு பெயர்கள் இல்லை. அதற்கான தண்டனை ஊர் அறிய, தவறை உணரும் வகையில் இருக்க வேண்டும்.

மற்றவர்கள் செய்வது பழிவாங்கும் அரசியல், பழிப்போடும் அரசியல். நாங்கள் செய்யப்போவது வழித்தேடும் அரசியல், வழிகாட்டும் அரசியல். எங்கள் கட்சியின் கொள்கை, வியூகம் குறித்து ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் நேர்மை என கூறுவோம். நேர்மை என்னும் ஆயுதத்தை கொண்டு பல விஷச்செடிகளை களையெடுப்போம். அது பழிவாங்கும் அரசியல் அல்ல; கடமை. மாணவர்களின் மீது அரசியல் தாக்குவதற்கு முன்பாக, மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.