பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால், தோற்றது இந்தியா

அடிலெய்டு டெஸ்டில் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால், 36 ரன்னுக்கு சுருண்டது இந்தியா. ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு  ஆட்டமாக நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 244, ஆஸ்திரேலியா 191 ரன்கள் எடுத்தன. 53 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை  துவக்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 1 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்து, 62 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. மயங்க் அகர்வால் (5),  ‘நைட் வாட்ச்மேன்’ பும்ரா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

விக்கெட் சரிவு

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் மயங்க் அகர்வால் ஒரு பவுண்டரி அடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.  மறுபக்கம் கம்மின்ஸ் பந்தில் பும்ரா 2 ரன் எடுத்தார். அவ்வளவு தான் இதன் பின் திடீரென ஆஸி., ‘வேகங்கள்’ புயலாக பந்து வீசினர். முதலில் பும்ரா (2)  நடையை கட்டினார். புஜாரா ‘டக்’ அவுட்டானார். மறுபக்கம் முதல் ஓவரை வீசிய ேஹசல்வுட், மயங்க் அகர்வால் (9), ரகானேவை (0) அவுட்டாக்கினார்.

கோஹ்லி, ஹனுமா விஹாரி இணைந்தனர். கிரீனின் சூப்பர் கேட்சில் கோஹ்லி (5) வெளியேறினார். சகா (4). அஷ்வின் (0), ஹனுமா விஹாரி (8)  நீடிக்கவில்லை. ஷமி (1) காயத்தால் வெளியேறினார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்தது.

எளிய இலக்கு

அடுத்து இரண்டாவது இன்னிங்சில் 90 ரன்கள் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. மாத்யூ வேட்,  பர்ன்ஸ் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. வேட் (33) ரன் அவுட்டானார். லபுசேன் 6 ரன் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பர்ன்ஸ் (51), ஸ்மித் (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், டிச. 26ல் மெல்போர்னில் துவங்கும்.

 

மோசமான ஸ்கோர்

அடிலெய்டு டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 36 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் குறைந்த  ரன்னுக்கு சுருண்டது இது தான் முதன் முறை. இதற்கு முன் 1974ல் இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி 42 ரன்னுக்கு சுருண்டது.

இப்படி சொதப்பினா எப்படி

இரண்டாவது நாள் முடிவில் 62 ரன்கள் முன்னிலை, கைவசம் 9 விக்கெட்டுகள் இந்திய அணியிடம் மீதமிருந்தன. இரண்டாவது இன்னிங்சில் குறைந்தது 200 ரன்கள் எடுத்தால் கூட, ஆஸ்திரேலிய அணிக்கு 250க்கும் மேல் இலக்கு நிர்ணயித்து சவால் கொடுத்திருக்கலாம். ஆனால் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால், வரிசையாக அவுட்டாகி, டெஸ்ட் வரலாற்றில் மிக மோசமான ஸ்கோரை பதிவு செய்தது இந்தியா.

கடைசியில் ஆஸ்திரேலிய அணியிடம் வெற்றியை தாரை வார்த்துக் கொடுத்தது.

Leave A Reply

Your email address will not be published.