நீதி கிடைக்கும் வரைக்கும் தமிழர் பிரச்சினை சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்க வேண்டும்: சம்பந்தன்

நீதி கிடைக்கும் வரைக்கும் தமிழர் பிரச்சினை
சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்க வேண்டும்!

தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் நேரில் பேசி ஜெனிவா
விவகாரத்தைக் கையாளுவோம் என்கிறார் சம்பந்தன்

“இலங்கை அரசாலும் அதன் படைகளாலும் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் வரைக்கும் தமிழர் பிரச்சினைகள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். எனவே, இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளமையால் இம்முறை ஜெனிவா விவகாரத்தை நாம் தக்க முறையில் கையாள வேண்டும். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் நேரில் பேசி இறுதி முடிவை எடுப்போம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜெனிவா விவகாரத்தைக் கையாளப் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் தயாரிக்கப்பட்ட ஒரு நகல் வடிவம் வரைவுத் திட்டமாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால் தமிழ் மக்கள் தேசியக் கூட் டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது. அவர்கள் அந்த நகல் வரைவை நிராகரித்துள்ள நிலையில் ஜெனிவா விவகாரத்தைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு அணுகும் வகையில் அந்தக் கட்சிகளுடன் தொடர்ந்து பேசுவது என்று கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளது. இதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். நாங்கள் முரண்பட்டு நின்றால் அது தெற்கு அரசியல்வாதிகளுக்குச் சாதகமாகப் போய்விடும். எனவே, தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்திலும் சர்வதேச ரீதியிலும் ஓரணியில் நின்று தமிழர்களின் உரிமைக்காக – நீதிக்காகக் குரல் கொடுக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.