பயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தான் – அமெரிக்க அரசு குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் தொடர்ந்து நீடிப்பதாக அமெரிக்க அரசின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை செயல்பட பாகிஸ்தான் அனுமதிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டின் பயங்கரவாதம் தொடர்பான அறிக்கை ஒன்றிலேயே இந்த செய்தியை அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான், பயங்கரவாத இயக்கங்களின் பாதுகாப்பான புகலிடமாக தொடர்ந்து நீடித்து வருவதுடன், இந்தியாவையும், ஆப்கானிஸ்தானையும் குறிவைக்கும் பயங்கரவாத இயக்கங்களை தனது மண்ணில் தொடர்ந்து செயல்பட பாகிஸ்தான் அனுமதிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத இயக்கங்களாக லஸ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ மொஹமட் ஆகியவையும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத இயக்கங்களாக ஆப்கன் தலீபான், ஹக்கானி குழு ஆகியவையும் இயங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத இயக்கங்களை கட்டுப்படுத்தவும், நிதி உதவிகள் கிடைப்பதனை தடுக்கவும் பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை எடுத்தது.

ஆனாலும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் இன்னும் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

Comments are closed.