கருணாவை கைது செய்யுங்கள் இல்லையேல் போராட்டத்தை முன்னெடுப்போம் – பௌத்த தேரர்கள்

இராணுவத்தினரை படுகொலை செய்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ள கருணா அம்மா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை உடனடியாக கைது செய்யுமாறு மாகாண தேரர்களின் தலைவர் சங்கைக்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மானின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனை அடுத்து அவரை கைது செய்யுமாறு பல தரப்பினரும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே சங்கைக்குரிய ஓமல்பே சோபித தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருணா அம்மானை கைது செய்யாவிடின் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட நேரிடும் எனவும் சங்கைக்குரிய ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவத்தினரை கொலை செய்துள்ளதாக கருணா அம்மான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளதனை தவிர அதற்கு வேறு சாட்சிகள் தேவையில்லை என சுட்டிக்காட்டிய தேரர், இது குறித்து ஜனாதிபதி, பிரதமர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

நீதித்துறையின் கௌரவத்தினை பேணுவது குறித்து கவனம் செலுத்த வேண்டுமாயின் கருணா அம்மானை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும் சங்கைக்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கருணா அம்மான் மீது உடனடியாக வழக்குத் தொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.