ரஜினி சொன்ன ஒரே பதில் NO : ஜான்

எந்த சேனலை திருப்பினாலும் ரஜினியை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லோருடைய பார்வையும் அவரை நோக்கித்தான் இருக்கிறது.

இப்போது மட்டுமல்ல.

பாட்ஷா காலத்திலேயே பத்திரிகைகளின் பார்வையெல்லாம் ரஜினியின் மீதுதான் இருந்தது.
பல பத்திரிகைக்காரர்களும் பேட்டி எடுப்பதற்காக நேரம் கேட்டார்கள்.

எல்லோருக்கும் ரஜினி சொன்ன ஒரே பதில்
NO தான்.

ஆனால் ஒரே ஒரு பிரபல எழுத்தாளர் பேட்டிக்காக நேரம் கேட்டபோது மட்டும், “உடனே வரச் சொல்லுங்க. காத்திருக்கிறேன்” என்று மரியாதையுடன் சொன்னார் ரஜினி.

காரணம் அந்த எழுத்தாளர் மீது ரஜினி வைத்திருந்த மிகப்பெரும் மரியாதை.

“யார் அந்த எழுத்தாளர் ஜான் ?”

வேறு யார் ? சுஜாதாதான்.

அப்படித்தான் குமுதத்தில் வெளி வந்தது சுஜாதா ரஜினி
பேட்டி.

(1995)

சுஜாதா: அரசியல் ஈடுபாடு எப்படியிருக்கு?

ரஜினி: கொஞ்சம்கூட இல்லை. எதுக்காக அரசியல் ? பணம் புகழ் … ஜனங்களுக்கு நல்லது செய்யணும்… இதுக்காகத்தானே?
ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு பணம் புகழ் ரெண்டுமே இருக்கு. ஜனங்களுக்கு நல்லது செய்யணும்னா, இப்ப இருக்கிற அரசியல் நிலைமைல யாராலயுமே ஜனங்களுக்கு நல்லது செய்ய முடியாது.
இது நல்லா தெரியும்போது எதுக்காக அரசியலுக்கு வரணும் ?

சுஜாதா: அரசியலுக்கு வந்தா உங்க கைக்கு சக்தி வாய்ந்த பதவி வருமில்லையா?

ரஜினி: தனி மனிதனால ஒண்ணுமே சாதிக்க முடியாது.
மாறணும். எல்லாமே மாறணும். ஒட்டுமொத்தமா மாறணும். புதுவெள்ளம்னு சொல்றாங்க இல்லையா… அதுமாதிரி… எல்லாமே மாறணும். இப்ப இருக்கிற சிஸ்டம்ல யாராலயும் ஒண்ணுமே பண்ண முடியாது. மொத்தமா மாறினாத்தான் உண்டு.

சுஜாதா: ஏதாவது பண்ணணும்னு நினைச்சு வர்றவங்ககூட கொஞ்ச நாளில் மாறிடறாங்க இல்லையா? சீக்கிரத்தில் அந்த க்ளீன் இமேஜ் மறைஞ்சு போயிடுது.

ரஜினி: ஆமாம். எம்ஜிஆரையே எடுத்துக்கங்க. வந்த முதல் ரெண்டு வருஷத்துல எப்படி இருந்தார்? அதுக்கப்புறம் அவராலயே கூட ஒண்ணும் செய்ய முடியலயே…

சுஜாதா: சுத்தி இருக்கிறவங்க விடாம சாப்பிட்டுர்றாங்க இல்லையா?

ரஜினி: யெஸ். என்னன்னா… கொஞ்சம் நல்ல பேர் எடுக்கலாம். ‘அவரை விட இவர் பெட்டர்’னு (சிரிக்கிறார்)
ஆனா அது பிரயோஜனம் இல்லையே…ஸிஸ்டம் மாறணும்.”
இந்தப் பேட்டியைப் படித்த போது ஒன்று தோன்றியது.

சுஜாதா இன்று இருந்திருந்தால்,
ரஜினியின் ஆரோக்கியம்,
அரசியலின் ஆரோக்கியம்.
இரண்டுமே சரி இல்லாத
இன்றைய சூழ்நிலையில் அரசியலுக்கு வருவது பற்றி ஒருமுறைக்கு இருமுறை ரஜினியை சிந்திக்கச் சொல்லியிருப்பார்.
என்ன செய்வது ?

அன்றைக்கே சுஜாதா
சொன்னதுபோல,
“சுத்தி இருக்கிறவங்க விடாம சாப்பிட போறாங்க.”

ரஜினியும் ஏற்கனவே எப்போதோ உணர்ந்து சொன்னது போல,
“தனி மனிதனால ஒண்ணுமே சாதிக்க முடியாது. கொஞ்சம் பேர் எடுக்கலாம். ‘அவரை விட இவர் பெட்டர்’னு…
ஆனா அது பிரயோஜனம் இல்லையே…”

பார்க்கலாம்.
நினைத்துப் பார்க்க முடியாத சில அதிசயங்கள் கூட அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது !
நடக்கவே நடக்காது என்று நாம் நம்பிக் கொண்டிருந்த சில விஷயங்கள் கூட நாட்டில் ஆங்காங்கே நடந்து கொண்டுதானே இருக்கின்றன..!

 

Leave A Reply

Your email address will not be published.