கிளிநொச்சி விளையாட்டுத் தொகுதியை நாட்டின் பிரதான கேந்திர மையமாக ஸ்தாபிக்க நடவடிக்கை.

இலங்கையில் உள்ள விளையாட்டு வீரர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விளையாட்டுத் தொகுதியை 2021 முதல் நாட்டின் பிரதான விளையாட்டு கேந்திர மையமாக ஸ்தாபிப்பதறகு நடவடிக்கை

அத்துடன், கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுத் தொகுதியை 2021 ஜனவரி மாதத்தில் இருந்து இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் உள்ள தேசிய இளைஞர் படையினரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை

2010 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ச
ஜனாதிபதியாகவும் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவும் இருந்தபோது வடக்கிற்கான சர்வதேச விளையாட்டு அரங்கு’ என்ற கருப்பொருளின் கீழ், வட மாகாணத்திலிருந்து தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கத்துடன் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு விளையாட்டுத் தொகுதியை நிர்மாணிக்க அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்காக கிளிநொச்சி மாவட்ட நகர மையத்தில் 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு 400 மீற்றர் ஓடும் பாதை, 50 மீற்றர் நீச்சல் தடாகம், கால்பந்து மைதானம் மற்றும் பல விளையாட்டு வசதிகளுடன் கூடிய உள்ளக அரங்கு நிர்மாணிக்க 2014ம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

எனினும், குறித்த விளையாட்டுத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படாத நிலையில் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் கடந்த வருடம் (2019) வீரர்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

எனவே, கிளிநொச்சி விளையாட்டுத் தொகுதி அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், அங்குள்ள வீரர்களுக்கு அதை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.

மேலும் அதன் குறைபாடுகள் மற்றும் மீதமுள்ள கட்டுமானப் பணிகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்களால் முறையான மேற்பார்வை இல்லாமல் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களும் இதுவரை பாவிக்கப்படாத காரணத்தால் முடிக்கப்பட்ட பாகங்கள் கூட பழுதடைந்த நிலையில் இருந்தன. இந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  கவனத்துக்கு கொண்டு சென்றதன் பயனாக கிளிநொச்சி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டுத் தொகுதியில் ஏற்பட்ட சேதம் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து அவதானம் செலுத்தி.அதன்பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்டுமானப் பணிகளை முறையாக மேற்கொள்ளவும், தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து 2021 ஜனவரியில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் உள்ள தேசிய இளைஞர் படையினரிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுத் தொகுதியை இலக்காக வைத்து முதல்கட்டமாக பின்வரும் வேலைத்திட்டங்களை தேசிய இளைஞர் படையினர் செயல்படுத்த உள்ளனர்.

01. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தேசிய இளைஞர் படை பயிற்சி மையங்கள் இல்லாததால் இங்கு ஒரு தேசிய இளைஞர் படையணியை நிறுவுதல்.

02. இலங்கை முழுவதும் சிதறிக்கிடக்கும் திறமையான விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் அவர்களின் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ள தேசிய இளைஞர் படையின் மூலம் திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் அதன்மூலம் அவர்களின் சிறப்பு விளையாட்டு திறன்கள் மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துதல்.

03. பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு இந்த விளையாட்டுத் தொகுதியின் மூலம் அந்த ஊழியர்களின் உடற்பயிற்சி வசதிகளை கூட்டாக உருவாக்க ஒரு வாய்ப்பை வழங்குதல்.

04. தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கும் பிரதான நிறுவனமாக செயல்படுவது.

05. விளையாட்டு வீரர்களின் ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் ஆளுமை ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் புதிய விளையாட்டு கலாசாரத்தை உருவாக்க தேசிய இளைஞர் படையினர் தற்போது கிளிநொச்சி விளையாட்டுத் தொகுதியினை வைத்து திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.