மக்கள் நிராகரித்தால் அரசியலில் இருந்து விலகவுள்ளேன் – குணசீலன்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் என்னை நிராகரிப்பார்களாயின் நான் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுப்பெறுவேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் வைத்தியர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து  தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

‘மக்கள் ஒவ்வொரு முறையும் கட்சிகளை நம்பி தங்களுடைய வாக்குகளை வழங்கி வருகின்றனர். ஆனால், இதுவரை காலமும் மக்களின் வாழ்க்கைத் தரத்திலோ அல்லது அவர்களின் அடிப்படை பிரச்சினைகள் ஆகியவற்றினை தீர்ப்பதற்கு நாங்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக சிந்தித்து பார்க்க வேண்டும்.

மேலும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வித்தியாசமான சூழ்நிலையினை நாங்கள் எதிர்நோக்க உள்ளோம். அதாவது வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கைக்கு அடையாளமாக திகழ்ந்த கட்சிக்கு இடையே குழப்பம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கினை தொடர்ந்து எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடி ஆகிய பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த தேர்தலுக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளனர்.

எனவே மக்கள், சிந்தித்து வாக்களிக்க வேண்டும். பல கட்சிகள் இம்முறை போட்டியிடுகின்றன. வன்னியில் சுயேட்சைக்குழுக்கள் அதிகளவு களமிறக்கப்பட்டுள்ளன. எனினும் மக்களின் முடிவுதான் முக்கியமானதாக உள்ளது. ஆகவே மக்கள் எனக்கு ஆதரவு வழங்கினால் சேவை செய்ய தயாராக இருக்கின்றேன்.

மாறாக நான் தேவையில்லை. அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும் என மக்கள் நினைத்தால் அரசியலில் இருந்து நிறந்தரமாகவு ஓய்வு பெற்றுச் செல்லவும் தயாராக இருக்கின்றேன்,  என்றார்

Comments are closed.